Thursday 16 January 2014

ஆலமரம் (வெளிச்ச விழுதுகள்)

  ஆலமரம்

அணுவுக்குள் இருக்கும்
ஆற்றலைப் போல
மிகச்சிறு விதைக்கும்
அடங்கியிருந்த விசுவரூபம் நான்
ஆல மரம்.. அற்புத விருட்சம்.

தியாகக் குருதியின்
சேற்றில் முளைத்து
யுகங்களின் தாகம்
தேக்கிய விழிகளின்
கண்ணீர்த்துளிகளால் வளர்ந்த மரம் நான்.

விந்திய இமய முடி முதல்
விரிந்த குமரிக்கடல் வரை
பறந்து நிற்கும் என் கிளைகள்.
பசுமை மாறாத 
என் கிளைகள் நிழலுக்காகவும் 
பழத்தின் சுவைக்காகவும்
நேசமாய் வந்தமர்ந்த
பறவைகளின் பாசறை நான்.

பற்பல வண்ணப் பறவை இனங்களின்
மொழிகள் என்னவோ வேறு வேறுதான்.
பாடும் பண்ணின் சிந்தனை மட்டும்
என்றென்றும் ஒன்று.


நான்
உழைக்கும் பறவைகளின்
உற்சாகக் கூடாரம்.
அவர்களின் ஒவ்வொரு உற்சவமும்
என் கிளைகளிலே அரங்கேற்றம்.
சத்தியம் என்பதுஎன் நித்திய வேதம்
அன்பும் அமைதியும் மாறாத பாடம்.

எனவே 
கழுகுகளையும் கோட்டான்களையும்
என் 
தன்மானத் தளிர்கள்
தடை செய்து விடுகின்றன.

கூடு கட்டுவதற்கென்ன.. குந்துவதற்குக்கூட 
என் 
கொள்கைக் கொம்புகள் 
இடம் தருவதில்லை.
கட்டணம் செலுத்தினாலும் 
கட்டாயம் அனுமதில்லை.

காலங்களின் சுழிப்பில்-என்
சோதனைகளும் வேதனைகளும்
சொல்லி முடியாதவை.

சரித்திரத்தில் சாதனை மரம் நான்
பசுமை மாறாத பால்மனம் கொண்டதால் 
வறட்சியைத் தாங்கி வளந்த மரம் நான்.
சில பறவைகள்..
எங்கிருந்தோ வந்து
என் கனிகளை ருசித்த பின்
எழும்பிப் பறந்து 
என் தலைமீதே எச்சமிட்டுச் செல்கின்றன.

சில..
இங்கே பழம் தின்று
எங்கோ சென்று கொட்டை போடுகின்றன.

சிலவோ 
சிறகுகள் முளைக்கும்
சின்னப் பறவைகளின்
முளைக்கும் சிறகுகளை
மொட்டையடிக்க முனைகின்றன.

என்னால் 
மரங்கொத்திப் பறவைகளை மட்டும்
மன்னிக்க முடிவதில்லை.

அவை.. என் 
ஆடையை உரித்து

அசிங்கப் படுத்துவதில்
ஆனந்தம் அடைகின்றன. என்னில்
பொந்துகளைச் சிருஷ்டித்துப்
பாம்புகளை அழைத்து வரப் பயணப்படுகின்றன. 

நீரைத் தேடி நிலத்துக்குள் ஓடி
என் 
வேர்கள் எப்போதும் களைப்பின்றி உழைக்கும். 

என் விதைகள் கசந்தாலும்
கனிகள் என்றும் இனிமையானவை 

என் முடி முதல் அடி வரை
அனுதினமும் எனக்கு 
அவஸ்தைகள் ஆயிரம்.

என் மண்ணில் அங்கங்கே 
கந்தக நெடியால்
என் கண்கள் கசிவதை கவனித்தீர்களா?

பாட்டுப் பறவைகளுக்கு மட்டுமே
பழம் தின்னக் கொடுக்கும்
ஏழை மரம் நான்.

வாழையைப் போல 
வளைந்து கொடுக்கும்
வாய்ப்பு எனக்கில்லை.

என்னை வீழ்த்த முடியவில்லையே என
புயல்கள் என்னிடம் வந்து அடிக்கடி 
புலம்பிவிட்டுப் போகின்றன.
வெறும்
 காற்றுக்காகவா நான் கவலைப்படப் போகின்றேன்.

வெளிச்ச விழுதுகள்தான் என் வேர்கள்.
காற்றில் ஆடினாலும் 
கம்பீரமாகக் கால்கள் பதிக்கும்
ஆல மரம் நான்
அற்புத விருட்சம்.